வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ள அப்பகுதி மீனவர்கள்.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு நீதிகோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மருதங்கேணி பிரதேச செயலகத்தின் இரண்டு வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருக்கும் மீனவர்கள், எமது கடற்பரப்பு இந்தியாவுக்கு விற்கப்பட்டதா, உயிரை குடிக்கும் இந்திய படகை தடுத்து நிறுத்து,
இந்திய படகுகளுக்கு நாங்கள் இரையா, வலை வீச உயிர் பயம் என்ன செய்வோம், எமது கடல் எமக்கு வேண்டும், கடற்றொழில் அமைச்சே திரும்பிப்பார், மீனவர்களை கொல்லாதே போன்ற கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.
அப்பகுதியில் பொலிசார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் பொலிஸ் அதிகாரிகள் வீதியை மறிக்காது போராட்டத்தை மேற்கொள்ளுமாறு போராட்டக்காரர்களிடம் கோரிவருகின்றனர்.
இந் நிலையில் மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முடியாமல் வெளியில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர்களான ஆ.சுரேஸ்குமார், வே.பிரசாந்தன், தவிசாளர் ச.அரியகுமார், பிறேமதாஸ், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி ச.திரவியராசா ஆகியோரும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment