இலங்கையைச் சேர்ந்த 4 மீனவர்களின் விடுதலை தொடர்பில் குரல் கொடுத்துள்ள சீமான்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கையைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடலோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுக் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
கடலோர காவல்துறையினரால் முகமது கலீல், முகமது ரியாஸ், முகமது ரிஸ்கான், முகமது கைதர் என்ற 4 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் மட்டக்களப்பில் இருந்து மீன்பிடிக்க சென்ற நிலையில், படகின் இயந்திரம் பழுதானதால் உண்ண உணவின்றி, மூன்று வேளையும் பச்சை மீனை சாப்பிட்டும், கடல் நீரைக்குடித்தும் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், 62 நாட்களுக்குப் பிறகு காற்றின் மூலம் படகு கரை ஒதுங்கியபோது சென்னை எண்ணூர் துறைமுகக் காவலர்களால் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நான்கு பேரும் படகு எந்திரத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாகத் தமிழ்நாட்டின் எல்லைக்குள் கரை ஒதுங்க நேரிட்டது. ஆகவே, அவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்து இருப்பது சட்டத்திற்குப் புறம்பானதாகும்.
இரு நாட்டின் கடல் எல்லை வரையறைகளாலும், அரசு அதிகாரத்தின் அடக்கு முறைகளாலும் பாதிக்கப்படுவது இரு நிலங்களிலும் வாழும் ஏது மறியா தமிழ் மீனவர்கள்தான் என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும்.
எனவே எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் வாடும் ஈழத்தமிழ் இசுலாமிய மீனவர்கள் நால்வரையும் விடுவித்து, நாடு திரும்பச் செய்து, அவர்களது குடும்பத்தின் கண்ணீரைத் துடைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment