யாழில் வீதியை இடை மறித்து இடம்பெற்ற பாரிய போராட்டம்.
இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதி மறியல் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட நிலையில் குறித்த வீதி ஸ்தம்பிதமடைந்துள்ளது.
குறித்த போராட்டத்தினை யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனமும், மாதகல் பிரதேச கடற்தொழிலாளர்களும் இணைந்து இன்றைய தினம் காலை முன்னெடுத்தனர்.
இதன்போது 2500 இந்திய இழுவைமடி தொழிலை நிறுத்தும் வரை போராடுவோம், இந்திய அரசு வடக்கு மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க கோருகிறோம். எமது கடல் வளத்தையும் வாழ்வாதாரத்தையும் , பாதுகாக்க இலங்கை அரசை வலியுறுத்துவோம் போன்ற கோஷங்களை முன் வைத்து அவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதன்போது வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையால் , அவ் வீதி வழியான போக்குவரத்துக்கு தடைப்பட்ட நிலையில் , பொலிஸார் போராட்டகார்களை வீதியோரமாக நின்று போராடுமாறு பணித்தனர்.
எனினும் “கடலில் அயல் நாட்டினவர்களின் அத்துமீறல்களை தடுக்க முடியவில்லை, சொந்தநாட்டு மக்களை அடக்க முயல்கிறீர்களா ? ” “எங்களுடன் கடலுக்கு வாருங்கள் , அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை காண்பிக்கிறோம். முடிந்தால் அவர்களை கைது செய்யுமாறும் கோரி பொலிஸாரின் வேண்டுகோளை புறம் தள்ளி , ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் அமர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் குறித்த போராட்டத்தை முன்னெடுத்த பின்னர் , உதவி பிரதேச செயலாளாரிடம் மகஜர் ஒன்றினை கையளித்த பின் தமது போராட்டத்தினை அவர்கள் முடிவுக்கு கொண்டுவந்தனர்.
Post a Comment