ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்குண்டு பலி.
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை பிரதேசத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்குண்டு பலியான சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தனக்கு சொந்தமான காணியினை பராமரிக்கும் பொருட்டு அங்கு பயிரிடப்பட்ட பயிர்களை பாதுகாத்து வருவதாகவும், அவர் தனது காணியினை சுற்றி யானைகள் உட்பிரவேசிக்காமல் சட்டவிரோதமான முறையில் மின்சார வேலிகளை அமைத்து தனது செய்கை பண்ணப்பட்ட காணியினை பாதுகாத்து வந்ததாகவும் அறியமுடிகின்றது.
இந்நிலையில் அச்சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து காணிக்கு சென்று வீடு திரும்பாத நிலையில் அவரின் மனைவி குறித்த இடத்திற்கு சென்ற போது மின்சாரம் தாக்கிய நிலையில் உயிரிழந்து இருந்ததாகவும்,குறித்த நபர் அண்மையில் யானையின் தாக்குதலுக்கு அகப்பட்டு உயிர் தப்பியவர் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின போது தெரியவந்துள்ளது.
மேலும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவானின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment