யாழில் பூட்டிய அறையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்.
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குப்பிளான் பகுதியில் பூட்டிக்கிடந்த வீட்டில் 60 வயதான பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் தாயும் மகளும் மட்டுமே வசித்துவந்த நிலையில் மகள் உயிரிழந்துள்ளார். ஐரோப்பிய நாடொன்றில் 15 வருடங்களாக வாழ்ந்து வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளனர்.
வயதான தாயை பராமரித்து வந்த மகள், பாதுகாப்பு கருதி வெளியில் நடமாடுவது மிகவும் குறைவாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நான்கு தினங்களாக அவர்களின் நடமாட்டம் இருக்கவில்லை என கூறும் அயலவர்கள், வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து , பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து நேற்றிரவு 11 மணி அளவில் அங்கு சென்ற பொலிஸார் வீட்டை உடைத்து பார்த்தபோது மகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
அத்துடன் தாயார் மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டவர் என்பதனால் அவரை மீட்ட பொலிஸார், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு தாயாரை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. சில தினங்களுக்கு முன்னரே குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விரிவாக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment