Header Ads

test

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கடமை புரியும் பெண் சிற்றூழியர் மீது கோரத் தாக்குதல்.

 முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவர் மீது ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியை அண்மித்த காட்டுப்பகுதியில் வைத்து தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு ஊழியர் மீது  திரவம் ஒன்றை வீசி தாக்குதல் மேற்கொண்டமையால் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தூரப் பிரதேசங்களிலிருந்து வனப்பகுதிகளைக் கடந்து பணிக்கு வரும் ஊழியர்களை கடும் அச்சத்தில் தள்ளியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றி வருகின்ற பெண் சிற்றூழியர் ஒருவர் நேற்று இரவு தன்னுடைய கடமைகளை நிறைவு செய்து இன்று அதிகாலை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையிலிருந்து கொக்காவில் வீதி துணுக்காய் எனும் முகவரியில் அமைந்திருக்கின்ற தன்னுடைய வீட்டிற்கு மோட்டார் வண்டியில் சென்றுள்ளார்.

ஒட்டுசுட்டான் நகரத்தைத் தாண்டி மாங்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வனப்பிரதேசத்தில் வீதியில் நின்ற இருவர் குறித்த ஊழியர் மீது திரவத்தை வீசியுள்ளனர்.

இதனால் கண்கள் பாதிக்கப்பட்ட குறித்த ஊழியர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல முடியாத நிலையில் அருகிலிருந்த ஒரு பொதுக் கிணற்றில் சென்று முகத்தைக் கழுவிய போதும் கண்ணில் பார்வை சீராகாத நிலையில் குறித்த பகுதியிலிருந்த ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து அவசர தொலைபேசி ஊடாக நோயாளர் காவு வண்டியை அழைத்து மாவட்ட வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவருடைய கண்களில் பார்வை கோளாறு ஏற்பட்டுள்ள  நிலையில் என்ன திரவம் வீசப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான பின்னணியில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மாங்குளம் மல்லாவி துணுக்காய் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் சுமார் 20 வரையான ஊழியர்கள் குறிப்பாகப் பெண் ஊழியர்கள் குறித்த பகுதிகளைக் கடந்து வனப்பகுதி ஊடாக பல்வேறு அச்சத்துக்கு மத்தியிலும் காட்டு யானைகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் வைத்தியசாலையில் கடமையாற்ற வருகை தந்து கொண்டிருக்கின்ற போது இவ்வாறான ஒரு தாக்குதலை எதிர்கொண்டுள்ளமை  மேலும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாக்குதல் முயற்சி திருடர்களா அல்லது கொலை முயற்ச்சியா, என்ன நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியாத நிலையில் ஊழியர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளதோடு குறித்த பாதிக்கப்பட்ட பெண் தான் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வேலைக்கு வருவதாகவும் இவ்வாறான சம்பவம் இன்னும் தன்னை அச்சத்துக்குள்ளாகியுள்ளதாகவும், தன்னை தன்னுடைய கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வைத்தியசாலைக்குக் கடமைக்கு மாற்றித் தருமாறும் தன் மீதான தாக்குதல் அல்லது கொலை முயற்சியை கண்டித்து நீதியான விசாரணையை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்து ஊழியர் மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்திருக்கும் நிலையில் தற்போது யாழ்ப்பாணம் மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments