மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயின் வயிற்றில் இறந்த சிசு.
விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 9 மாதங்களேயான சிசு, நேற்று உயிரிழந்துதுள்ளது.
வாழைச்சேனை - வாகரை பிரதான வீதியிலுள்ள காயங்கேணி பாலத்துக்கு அருகில் முச்சக்கரவண்டியும் காரும் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
திருகோணமலை, ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான 9 மாத கர்ப்பிணி தாயான சிவானந்தம் சுபாஜினி மற்றும் அவரது உறவினர் உட்பட 4 பேர், பொலன்னறுவை - செவினப்பிட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.
இதன்போது , காயங்கேணி பாலத்துக்கு அருகில் பயணித்துக் கொண்டிருக்கையில், ஓட்டோவின் பின் பக்க ரயர் காற்றுப் போனதையடுத்து, வீதியோரத்துக்கு ஓட்டோவை நிறுத்த முற்பட்ட போது, பின்னால் வந்த கார் முச்சக்கரவண்டியை மோதியுள்ளது.
இதில் கர்ப்பிணியும் அவரது உறவினர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கர்ப்பிணி தாயார் நேற்று மாற்றப்பட்ட நிலையில், அவரது வயிற்றில் இருந்த சிசு மரணித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து சத்திர சிகிச்சை மூலம் சிசுவை வெளியில் எடுத்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, காரை செலுத்திச் சென்ற நபர் கைதுசெய்யப்பட்டு, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாழைச்சேனை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment