மனைவி மீது அதீத காதலால் கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிகுண்டை வைத்த நபர்.
பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிக்கும் வகையிலான வெடி குண்டொன்றை வைப்பதற்கான திட்டத்தை வகுத்தது தான் என, கைது செய்யப்பட்டுள்ள 75 வயதான ஓய்வூப் பெற்ற வைத்தியர், கொழும்பு குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் குறித்த தேவாலயத்தின் மீது வெறுப்புடன் இருந்துள்ளமை, விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு இதற்கு முன்னர் கைக்குண்டொன்று வைக்கப்பட்ட சம்பவம் குறித்தும், அவர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு கைக்குண்டு வைக்கப்பட்டமை குறித்து, கைதுசெய்யப்பட்டுள்ள ஓய்வூப் பெற்ற வைத்தியர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
1974ம் ஆண்டு தான் பௌத்த பெண்ணொருவரை, பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் செய்துக்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தனது மனைவி பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதனால், குறித்த தேவாலயத்திலிருந்த பாதிரியார், தனக்கு காலை நேர திருப்பலி ஒப்புக் கொடுத்தலை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளமையினால், அது தொடர்பில் தான் மனவேதனையுடன் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனாலேயே, குறித்த தேவாலயத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டதாக, குறித்த வைத்தியர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் இதன்போது விசாரணை நடத்தியுள்ளனர்.
தனது மனைவி கவலைக்கிடமாக இருந்த சந்தர்ப்பத்தில், அவரை கொம்பனிதெருவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்க முயற்சித்த போதிலும், தனது மனைவியை அனுமதிக்க வைத்தியசாலை மறுப்பு தெரிவித்துள்ளதாக அவர் விசாரணைகளின் போது கூறியுள்ளார்.
இந்த நிலையில், நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த வைத்தியசாலையினால், தனது மனைவிக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்பட்டமையினால், வைத்தியசாலைக்கு பிரசாரத்தை வழங்கும் நோக்கில், கைக்குண்டை வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக தான், கைக்குண்டை வைத்த நபருக்கு இடைக்கிடை பணம் வழங்கி வந்ததாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தனது மனைவியின் மீது கொண்ட காதல் காரணமாக, அவர் உயிரிழந்ததன் பின்னர், அவரின் அஸ்தியின் ஊடாக தயாரிக்கப்பட்ட மோதிரம் ஒன்றையும், குறித்த வைத்தியர் தனது விரலில் அணிந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை ஆகியவற்றுக்கு, கைக்குண்டை தயாரித்து வைத்தியருக்கு வழங்கியதாக கூறப்படும் நபர், ஹம்பாந்தோட்டை பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Post a Comment