முல்லைத்தீவில் உடல்நிலை பாதிக்கப்பட்ட யானை மக்கள் குடியிருப்புக்குள் பிரவேசம் - சிகிச்சையளிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்.
முல்லைத்தீவில் உள்ள கிராமமொன்றில் உடல்நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் நடந்து செல்ல முடியாத நிலையில் விவசாயிகள் நிலத்தில் வீழ்ந்துள்ளது.
முல்லைத்தீவு குமுழமுனை மேற்கு கரடிப்பூவர் கிராமத்திலேயே இவ்வாறு யானை நிலத்தில் வீழ்ந்துள்ளது.
மேலும், சுமார் மூன்றரை அகவை கொண்ட குறித்த குட்டி யானை வாயில்
ஏற்பட்ட காயத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக உணவு உட்கொள்ள முடியாத நிலையில் விவசாயிகளின் விளை நிலத்திற்குள் வந்து வீழ்ந்துள்ளது.
யானை வீழ்ந்துள்ள சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிராம மக்கள் தகவல் கொடுத்துள்ளார்கள்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை (31) காலை விரைந்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் டி.கிரிதரன் தலைமையிலான வைத்திய குழுவினர் சிகிச்சை அளித்துள்ளார்கள். யானைய குட்டியின் உடல் நிலையினை கருத்தில் கொண்டு சிகிச்சை முன்னெடுத்துள்ளனர்.
இருப்பினும் யானை எழுந்து நடக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது. குமுழமுனை கரடிபூவர் கிராமத்தில் யானை வேலி இல்லாத நிலையில் காட்டு யானையின் தொல்லையினால் நாளாந்தம் விவசாயிகள் அழிவினை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை, நிலக்கடலை, உழுந்து, சோளம் போன்ற செய்கையினை மேற்கொண்டு வருவதாகவும் யானைகளால் பாதிப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
யானைக்கு சிகிச்சை மேற்கொண்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையினை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றார்கள்.
Post a Comment