பாகிஸ்தானில் எரித்து கொல்லப்பட்ட இலங்கையர் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள அறிக்கை.
பாகிஸ்தானில் இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கம் எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசும் மக்களும் மிக நம்பிக்கையுடன் அவதானித்து வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசாங்கம், இந்த மிலேச்சத்தனமான கொலை சம்பவம் நடந்தும் உடனடியாக சட்டத்தை நிறைவேற்ற எடுத்த நடவடிக்கைகளை இலங்கை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாகிஸ்தானில் வசிக்கும் இங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அந்த அறிக்கையில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் சிலர், அந்த தொழிற்சாலையின் முகாமையாளராக பணியாற்றிய இலங்கையரை தாக்கி, கொலை செய்து எரித்த சம்பவம் நேற்று நடந்தது.
இலங்கையை சேர்நத பிரியந்த குமார என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக சியல்கோட் மாவட்ட பொலிஸ் அதிகாரி உமர் சையட் மலிக் தெரிவித்துள்ளார். இவர் பியல்கோட் பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்த சம்பவம் நகரின் வசிராபாத் வீதியில் நடந்துள்ளது. தனியார் தொழிற்சாலையின் ஏற்றுமதி முகாமையாளராக பணியாற்றிய இலங்கை நபரை தொழிற்சாலையின் ஊழியர்கள், தாக்கி கொலை செய்த பின்னர், சடலத்தை எரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பொலிஸார் 100க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.
Post a Comment