இவரை கண்டால் உடன் அறியத்தரவும் - பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள கோரிக்கை.
தேடப்பட்டு வரும் நபர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் கிடைக்குமாயின் உடன் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
மாவனெல்ல பொலிஸ் பிரிவில், வலகடயாய, மாவனெல்ல பிரதேசத்தில், டிசெம்பர் 2ஆம் திகதி அதிகாலையில், 42 இலட்சம் ரூபாய் பெறுமதியான NC-CAS 9729 எனும் வௌ்ளை நிற வெகனார் வகையைச் சேர்ந்த கார் மற்றும் கையடக்க தொலைபேசிகள் நான்கை, களவெடுத்துச் சென்றமை தொடர்பில், குறித்த நபர் தேடப்படுகின்றார்.
இது தொடர்பில் தெஹிவளை, நிகபோவ வீதியில் வசிக்கும் நபரே, மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதை அடுத்தே மாவனெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முறைப்பாட்டாளர், வாடகை வாகனத்தைச் செலுத்தும் சாரதியாவார். அவரது கையடக்க தொலைபேசிக்கு டிசெம்பர் 30ஆம் திகதியன்று அழைப்பையெடுத்த நபரொருவர், வாகனத்தை வாடகைக்கு அமரித்தியுள்ளார்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு அண்மையில், வாகனத்தில் ஏறிக்கொண்ட அந்த நபர், கண்டியை நோக்கி பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். பயணிக்கும் வழியில் இரண்டு தடவைகள் சாரதிக்கு தேநீர் மற்றும் உணவுப்பொருட்களை வாங்கிக்கொடுத்துள்ளார்.
இதனையடுத்து கண்டிக்குச் சென்று திரும்பும் வழியில், சாரதி வாந்தி எடுத்துள்ளார். மயக்கமும் அடைந்துவிட்டார். இந்நிலையில், வாடகைக்கு வாகனத்தை அமர்த்திய அந்த நபர், வாகனத்தை செலுத்திக்கொண்டு வந்துள்ளார்.
மாவனெல்ல, வடக்கடயாய பிரதேசத்தில் உள்ள தங்குமிட விடுதியில், சாரதியை அனுமதித்துவிட்டு, அங்கிருந்த வாகனத்தையும் கையடக்கதொலைபேசிகளை நான்கையும் அந்நபர் எடுத்துச்சென்றுவிட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புகைப்படத்தில் இருக்கும் நபர் தொடர்பில் தகவல்கள் கிடைக்குமாயின், மாவனெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 071-8591418 மற்றும் மாவனெல்ல பொலிஸ் 035-2247622 என்ற இலக்கங்களுக்கு தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment