பிள்ளையார் சிலைக்கு மேல் புத்தரின் சிலை வைக்கப்பட்டதால் வெடித்தது போராட்டம்.
திருகோணமலை மூதூர், 64ஆம் கட்டை மலையடி பிள்ளையார் கோயிலில் பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மூதூர் பிரதேச சைவ குருமார்களால் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
எனினும் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதற்கு முன்னரே குறித்த பகுதிக்கு வந்த மூதூர் பொலிஸார் பிள்ளையாருக்கு மேல் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை எடுத்துச் சென்றதாக கூறப்படுகின்றது. நேற்றுமுன்தினம் இரவு விசமிகள் சிலர் பிள்ளையாருக்கு மேல் புத்தர் சிலையினை வைத்து சென்றதாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த செயலை கண்டிக்கும் முகமாக , 64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக மூதூர் பிரதேச சைவ குருமார்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, மூதூர் கொட்டியாராம விஹாராதிபதி அங்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.
அதோடு நேற்றைய தினம் இந்துக் குருமார்களும் ,பொதுமக்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியபோதும் குறித்த புத்தர் சிலை யாரால் வைக்கப்பட்டதென்று இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை 64ஆம் கட்டை மலையடி பிள்ளையார் கோவில் பல வருடகாலமாக அருகிலுள்ள கிராம மக்களாலும், திருகோணமலை, மட்டக்களப்பு வீதியூடாக பயணம் செய்யும் பொதுமக்களாலும் காலம் காலமாக பூஜிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment