வவுனியாவில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றவர் சில மணி நேரத்தில் மரணம்.
வவுனியாவில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சில மணிநேரத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியைப் பெற்றிருந்ததுடன் இதன்போது ஏற்கனவே சினோபாம் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றிருந்தார்.
சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய தடுப்பூசி ஏற்றிய பின் சிறிது நேரம் அவ்விடத்தில் அமர்ந்ததன் பின்பு துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கி சென்றுள்ளார். வீடு சென்று சில மணி நேரத்தில் திடீரென குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரது சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சில நோய்களுக்கு உட்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா காத்தார் சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலத்திற்கு தற்போது பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மரணத்திற்கான காரணம் குறித்து அறிந்து கொள்ள அவரது சடலத்தை உடனடியாக உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment