Header Ads

test

முல்லைத்தீவில் புலிகள் புதைத்த தங்கத்தை தேடி வலை விரிப்பு.

 தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்கத்தை தோண்டி எடுக்கும் வகையில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் முல்லைத்தீவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வு பணிகள் நாளை மாலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இறுதிக் கட்ட யுத்ததின் போது புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட இடமான முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் இந்த அகழ்வு நடவடிக்கை இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் அகழ்வு நடவடிக்கைகள் காவல்துறையினரால் இன்று மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

குறித்த அகழ்வுப் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்கனவே இரண்டு குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றது.

அந்தக் குழிகள் 05 அடிக்கு மேற்பட்ட ஆழம் கொண்ட குழிகளாகவும் காணப்படுவதோடு நீர் நிரம்பிய நிலையில் காணப்படுகின்றது.

முதற்கட்டமாக குழிகளில் உள்ள நீரைவெளியேற்றி அகழ்வு நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த கிடங்குகளில் இருந்த நீரை வெளியேற்ற முடியாமல் போயுள்ளது. இதன் காரணத்தினால் நாளை மாலை வரை மீண்டும் இந்த அகழ்வுப்பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அகழ்வு நடவடிக்கை இடம்பெறும் இடத்தில் காவல்துறையினர், விசேட அதிரடி படையினர், இராணுவத்தினர், புலனாய்வாளர்கள், உள்ளிட்ட பல தரப்புகள் பிரசன்னமாகியிருந்தனர்.

குறித்த பகுதியிலுள்ள தங்கத்தை நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய தோண்டி எடுப்பதற்கு முன்னதாக அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவர் இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  





No comments