மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலையில் இடம் பெற்ற கசப்பான சம்பவம் முழு ஆசிரியர் சமூகத்தையுமே இழிவு படுத்தியுள்ளதாக ஆசிரியர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாகத் தாம் அதிருப்தி அடைவதாக இலங்கை அரச ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று திருகோணமலை ஊடக இல்லத்தில் இன்று (07) நடைபெற்றது.
இதன்போது குறித்த சங்கத்தின் வடக்கு, கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராஜா ருபேசன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலர் குறித்த பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது குறித்த ஆசிரியருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவருக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டு அந்த விசாரணையின்போது அவருடைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துக் குறித்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
ஒரு ஆசிரியரால் இளைக்கப்பட்ட தவறை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தை ஒரு சிலர் அரசியல் நோக்கத்திற்காக குறித்த பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களையும் அன்றைய தினத்தில் வீதியில் நிறுத்தி வைத்திருந்தார்கள்.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும் அதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று வரை சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிய முடிகின்றது.
குறித்த ஒரு ஆசிரியருக்காக பாடசாலையின் பிரதான நுழைவாயிலைப் பிறிதொரு பூட்டினை கொண்டு பூட்டி அங்கு உட்செல்ல எவரையும் அனுமதிக்காது தடுத்தமை முற்றிலும் சட்டவிரோதமான ஒரு செயலாகும். கடந்த 24 வருட காலமாகத் தீர்த்து வைக்கப்படாமல் இருக்கின்ற சம்பள முரண்பாட்டு பிரச்சினை நிலவி வருகின்ற இக் காலப்பகுதியில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது மிகவும் வருத்தத்திற்குரிய விடயம்.
இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருதில்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு குறித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தாம் மாபெரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தயார் நிலையில் உள்ளதாகவும் இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராஜா ருபேசன் தெரிவித்துள்ளார்.
Post a Comment