பெருந்திரளானோரின் கண்ணீருடன் நவீனனின் பூதவுடல் நல்லடக்கம்.
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்த பாண்டிருப்பைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் அழகரெத்தினம் நவீனனின் பூதவுடல் பொலிஸ் மரியாதை அணிவகுப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்று (27-12-2021) திங்கட்கிழமை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன், அம்பாறை வைத்தியசாலையிலிருந்து பொலிஸாரினால் கொண்டுவரப்பட்ட நவீனனின் பூதவுடல் நேற்று (26-12-2021) ஞாயிறு இரவு 10.30 மணியளவில் காரைதீவு, விபுலாநந்த சதுக்கத்திலிருந்து கல்முனை, பாண்டிருப்பு இளைஞர்கள் சகிதம் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று திங்கட்கிழமை (27-12-2021) காலை 10.15 மணியளவில் பொலிஸ் மரியாதை அணிவகுப்புடன் பூதவுடல் பாண்டிருப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதன்போது பெருந்திரளான இளைஞர்கள் பொதுமக்கள் கதறியழுதபடி பங்கேற்றதைக் காணமுடிந்தது.
பூதவுடலை பொலிஸ் கட்டளைச்சட்டத்தின்படி முறைப்படி அவர்களே தாங்கி வந்து, பாண்டிருப்பு இந்து மயானத்தில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. அதன்பின்பு, கல்முனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் உயர் அதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு பொலிஸ் மரணக் கட்டளைச் சட்டத்தின்படி பொலிஸ் மாஅதிபரின் செய்தி வாசிக்கப்பட்டு அவர் சார்ஜென்டாக பதவியுயர்வு பெற்றதை பகிரங்கமாக வாசித்தனர்.
இரத்தக்கறை காயமுன்னரே இறப்பை சந்தித்து இலங்கைப் காவல்துறைக்காக உயிர்நீத்த பொலிஸ் கான்ஸ்டபிள் நவீனன் (8861) டிசம்பர் 24ஆம் திகதி முதல் பொலிஸ் சார்ஜென்டாக பதவிஉயர்த்தப்படுவதாக பொலிஸ் மாஅதிபரின் செய்தி வாசிக்கப்பட்டது.
பின்னர், அவர் பாவித்த தலைத் தொப்பி, பதக்கங்கள் ஆகியவற்றை நவீனனின் தந்தை அழகரெத்தினத்திடம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
தொடர்நது, பொலிசார் தமது கடமைகளை நிறைவேற்றி இறுதி மரியாதை செலுத்திய பின்னர் பூதவுடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு 11.42 மணியளவில் அவரது பூதவுடல் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
Post a Comment