Header Ads

test

இலங்கை இராணுவத் தளபதிக்கு எதிராக தடை விதிக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை.

 சிறிலங்கா இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு (Shavendra Silva) எதிராக தடை விதிக்குமாறும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனித உரிமை மீறல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ளமுடியாது எனவும், எனவே அமெரிக்காவைப் போன்று சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு தடை விதிக்குமாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக மெக்னிற்ஸ்கி (Magnitsky style) முறையிலான தடையை விதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான எலியற் கொல்பேர்ன் (Elliot Colburn) மற்றும் தெரேஸா வில்லியர்ஸ் (Theresa Villiers) ஆகிய இருவரும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள மெக்னிற்ஸ்கி சட்டத்தின் ஊடாக மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பாரிய ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு எதிராகத் தடைவிதிக்கமுடியும் என்பதுடன் அவர்களின் சொத்துக்களையும் முடக்கமுடியும்.

இந்நிலையில் குறிப்பாக சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின் போது இராணுவத்தின் 58ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்ட சவேந்திர சில்வா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களின் விளைவாக அவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது.

எனவே இவ்விடயத்தில் அமெரிக்காவைப் பின்பற்றிச் செயற்படவேண்டியது அவசியமாகும் என இருவரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் ஊடாக பிரித்தானியாவும் மனித உரிமை மீறல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்பதை வெளிக்காட்டவேண்டுமென, தெரேஸா வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

மனித உரிமைகள் உறுதிசெய்யப்படுவதற்கான தலைமைத்துவத்தை பிரித்தானியா வழங்கவேண்டுமென்பதோடு, பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான செயல்வடிவிலான நடவடிக்கைகளே தற்போதைய தேவையாக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

சிறிலங்காவிலும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக பிரித்தானியா அதனைத் தொடர்ந்து வலியுறுத்தவேண்டுமென சாரா ஜோன்ஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments