Header Ads

test

கோட்டா அரசாங்கமே உனக்கு கண் தெரியவில்லையா என தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்.

 நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்து நுவரெலியா - அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேயிலை மலையில் காணப்பட்ட நான்கு அடி, மூன்று அடி கொண்ட வளர்ந்த புற்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும், பதாதைகளை ஏந்தியும் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

தோட்ட நிர்வாகம் தற்போது வேலை நாட்களை குறைத்துள்ளதாகவும், தேயிலை செடிகளை பராமரிப்பதிலிருந்து கைநழுவி விட்டதால் தேயிலை மலைகள் காடாகி காணப்படுகின்றது.

இதனால் தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதனால், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட இத் தொழிலாளர்கள் அரசாங்கத்தால் தற்போது பொருட்களின் விலை அதிகரிப்பால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் நிர்வாகம் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக இருந்தால் கட்டாயமாக 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதால் நிர்வாகத்தால் நிர்ணயக்கப்படும் கொழுந்தினை பறிக்க முடியாத சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.

தொடர்ந்தும் அவர்கள் தெரிவிக்கையில்,

தேயிலை செடிகளில் கொழுந்தின் விளைச்சல் பாரிய சரிவு ஏற்பட்டதன் காரணமாக 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத நிலையில், அதற்கு குறைவாக கொழுந்து பறித்தால் ஒரு கிலோவுக்கு 40 ரூபா வீதத்தில் சம்பள கணக்கு முடிப்பதால் மாத வருமானம் மிகவும் குறைவடைந்துள்ளதோடு, குடும்ப செலவினை கட்டுப்படுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தங்களது ஆதங்களை வெளிப்படுத்தினர்.

மேலும், திடீரென கோதுமை மாவின் விலையை அதிகரிக்கப்பட்டுள்ளதால், தாம் ஒவ்வொரு நாளும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவு வகைகளை உட்கொள்வதால் விலை அதிகரிப்பு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தோட்ட நிர்வாகமும் தேயிலை மலைகளுக்கு உரம், மருந்து தெளித்தல், துப்பரவு செய்தல் போன்ற காரியங்களை செய்வதில்லை.

இவ்வாறான நிலைமையால் தாம் சொல்லனா துயரங்களை அனுபவித்து வருவதாக இவர்கள் தெரிவிப்பதுடன், அரசாங்கம் தமது பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை எனவும் மலையக அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மாத்திரம் வாக்குகளை பெறுவதற்கு வருவதாகவும், இனி வாக்கு கேட்டு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்ததுடன் தமக்கு உடனடியாக நல்ல தீர்வினை பெற்றுத்தர சம்மந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

மேலும் “உரம் வேண்டும்” - “கோட்டா அரசாங்கமே உனக்கு கண் தெரியவில்லையா?” - “மக்களின் பசி பட்டினிக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும்” போன்ற வாசங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.









No comments