கிண்ணியாவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் வெடித்துள்ள சர்ச்சை.
கிண்ணியா படகு விபத்து குறித்து செய்தி சேகரிக்கசென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேரின் உயிரைப் பறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச்சென்ற மூன்று ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கும் சுதந்திர ஊடக இயக்கம் (FMM) சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணையை கோரியுள்ளது.
மேலும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. ஊடகவியலாளர்களான அப்துல் சலாம் முகம்மட் யாசிம், எச்.எஸ்.எம். ஹலால்தீன், ஏ.எல்.எம்.ரஃபைதீன் ஆகியோரை பொதுமக்கள் அவர்களது பணிகளைச் செய்யவிடாமல் தடுத்து, விபத்து நடந்த இடத்தில் இருந்து விரட்டியடித்துள்ளனர்.
முஹம்மட் யாசிம் என்பவர் தாக்கப்பட்ட பின்னர் விபத்து தொடர்பான நேர்காணல்கள் மற்றும் உரிய தகவல்கள் அடங்கிய கையடக்கத் தொலைபேசியை போராட்டக்காரர்கள் பலவந்தமாக எடுத்துச் சென்றது தொடர்பாக கிண்ணியா காவல்துறையில் முறைப்பாடு (CIB (1) 10/291) பதிவு செய்துள்ளார்.
கிண்ணியாவில் படகு விபத்து தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு சோகமாக இருந்தாலும், பொதுமக்களின் கோபத்தை புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தாலும், உண்மையை சரியான நேரத்தில் மற்றும் அனைத்து விவரங்களுடனும் தெரிவிக்கும் ஊடக உரிமையை எந்த தரப்பினரும் கேள்விக்குட்படுத்தவோ அல்லது தடுக்கவோ கூடாது.
ஊடகவியலாளர்களின் தாக்குதலையும், அவர்களின் தொழில் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதையும் சுதந்திர ஊடக இயக்கம் (FMM) ஒரு பாரதூரமான சம்பவமாகக் கருதுவதுடன், அதனை வன்மையாகக் கண்டிக்கிறது.
நாட்டின் எந்தப் பகுதியிலும் தற்போதுள்ள சட்டத்தை அமுல்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை வலியுறுத்தும் சுதந்திர ஊடக இயக்கம், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை உடனடியாக விசாரணை செய்து, அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசாங்கத்தை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment