வீதியை கடக்க முற்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம்.
முந்தல் காவல் நிலையத்திற்கு முன்னால் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த முந்தல் காவல்துறை நிலையப் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முந்தல் காவல் நிலையத்தில் போக்குவரத்து பொறுப்பதிகாரியாக கடமைபுரிந்து வந்த பல்லம பகுதியைச் சேர்ந்த காவல்துறை பரிசோதகர் டபிள்யூ. எம்.ஆர். பண்டார என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று, குறித்த போக்குவரத்து பொறுப்பதிகாரி கடமை நிமித்தம் காவல் நிலையத்திற்கு முன்பாக வீதியைக் கடக்க முற்பட்ட போது, சிலாபத்திலிருந்து புத்தளம் பகுதி நோக்கிச் பயணித்த பட்டா லொறியொன்று குறித்த பொறுப்பதிகாரி மீது மோதியுள்ளது.
அதனையடுத்து, புத்தளத்திருந்து சிலாபம் நோக்கிப் பயணம் செய்த மற்றுமொரு சொகுசு கார் ஒன்றும் அதே சமயம் பொறுப்பதிகாரி மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விரண்டு வாகனங்களும் இவ்வாறு ஒரே சந்தர்ப்பத்தில் மோதியதில் படுகாயமடைந்த போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரிக்கு இரண்டு நாட்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Post a Comment