கொழும்பு கல்யாணி தங்க நுழைவு அதி நவீன பாலம் மக்கள் பாவனைக்கு.
இலங்கையில் முதன் முறையாக அதிசக்தி வாய்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய, கம்பி இணைப்பின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட புதிய களனிப் பாலத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் இன்று திறந்து வைக்கவுள்ளனர்.
இந்தப் புதிய களனி பாலத்திற்கு “கல்யாணி தங்க நுழைவு – Golden Gate Kalyani” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய இந்த வைபவம் நடைபெறும் என பெருந் தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பின்னர், கொழும்பு பிரதான நகரத்தையும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான வீதியும் இணைக்கப்பட்டதால், கொழும்புக்குள் வரும் வாகனங்களில் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வாகனங்கள் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய களனிப் பாலம் அதற்கு ஈடுகொடுக்க முடியாது என்பதால், 2014 ஆம் ஆண்டு புதிய களனிப் பாலத்தை நிர்மாணிக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
முன்னாள் அரச தலைவரும், தற்போதைய பிரதமருமான, மகிந்த ராஜபக்ச பெருந் தெருக்கள் அமைச்சர் என்ற வகையில் அன்று அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்தார்.
கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் கொழும்பு நிறைவிடத்தில் இருந்து பண்டாரநாயக்க சுற்று வட்டம் வரை 6 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ள இப் பாலத்தில் அங்கிருந்து கொடவத்தை வரையும், இஞ்சிக்கடை சந்தி வரையும், துறைமுக நுழை வாயில் வரையும் 4 வழித்தடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
Post a Comment