Header Ads

test

வெளி மாகாணங்களிலிருந்து வருகை தருபவர்களால் ஆபத்து - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவிப்பு.

 வெளி மாகாணங்களில் இருந்து டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் , இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற யாழ். மாவட்ட செயலகத்தில் கொரோனா தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டத்துக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில்  நுளம்புகள் சம்பந்தமான பூச்சியியல் ஆய்விலே டெங்கு நோயைப் பரப்புகின்ற நுளம்புகளும் குடம்பிகளும் அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளது.

அதேவேளை டிசம்பர் 6 முதல் ஒரு வார காலப்பகுதியை யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரமாக பிரகடனப்படுத்தப்படுவதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை சிரமதானம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதேச மட்ட கிராமிய மட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டங்களை நடத்தி, டெங்கு நுளம்பு கட்டுப்பாடு காலப்பகுதியில் பாடசாலைகள், பொது இடங்கள், அலுவலகங்கள், வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.


No comments