தீயில் கருகி உயிரிழந்தவர்களின் இரசாயன பகுப்பாய்வில் வெளிவந்துள்ள அதிர்ச்சித் தகவல்.
நுவரெலியா – ராகலை தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் உயிரிழப்பிற்கு காரணமான தீ விபத்து தொடர்பான அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வலப்பனை நீதவான் டி.ஆர்.எஸ். ஜினதாச முன்னிலையில் பகுப்பாய்வு அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஆகியன நேற்று சமர்ப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பற்றிய வீட்டில் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டமை இரசாயன பகுப்பாய்வினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இதன்போது மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன், அடுத்த வழக்கு விசாரணையின் போது, மேலதிக விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறும்,அதுவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி இரவு இராகலை இலக்கம் (01) தோட்ட பிரிவில் மண்ணால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வீடொன்றில் இடம்பெற்ற திடீர் தீ விபத்து சம்பவத்தில் வீட்டில் வசித்து வந்த ஆறு பேரில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் சிக்குண்டு உயிரிழந்திருந்தனர்.
இதன்போது ஆர்.ராமையா (55 வயது), அவரின் மனைவியான முத்துலெட்சுமி (வயது 50), இவர்களின் மகள் டிவனியா (வயது 35), குறித்த மகளின் பிள்ளைகள் இருவர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்திருந்தனர்.
சம்பவத்தில் உயிர் தப்பிய தங்கையா இரவீந்திரன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில்,அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment