சுவிட்ஸர்லாந்தில் இருந்து பணம் அனுப்பி யாழிலுள்ள கூலிப்படையால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்.
யாழ்ப்பாணம், உடுவில் - அம்பலவாணர் வீதிப் பகுதியில், கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை யாழ். மாவட்ட புலனாய்வு பொலிஸார் கைது செய்து, தம்மிடம் ஒப்படைத்ததாக, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, இருவரும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் தாக்குதலுக்கு பயன்படுத்த வந்ததாகக் கூறப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதலில் , 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
காணிப் பிரச்சினை ஒன்றுக்காக, அயல் வீட்டுக்காரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவமே, இந்த தாக்குதல் இடம்பெற்றமைக்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் நபர் ஒருவர், இந்த சந்தேக நபர்களான கூலிப்படைக்கு 3 இலட்சம் ரூபாய் பணம் கொடுத்து, குறித்த வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டு சொத்து சேதம் விளைவிக்க திட்டம் வகுக்கப்பட்டு இருந்ததாகவும், அதன் பிரகாரமே, மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் விசாரணையின் பின்னர், அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Post a Comment