கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்.
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த 6 வயது சிறுமி இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
படகு விபத்தில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த 6 வயதான எஸ்.நிபா எனும் சிறுமியே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பால விபத்தில் 4 மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிறுமியின் உயிரிழப்பை தொடர்ந்து படகு விபத்தில் சிக்கி மரணமடைந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. குறிஞ்சாக்கேணியில் பழைய பாலத்திற்குப் பதிலாக களப்பு பகுதியில் புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக, பீப்பாய்கள் மற்றும் பலகை என்பனவற்றைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள குறித்த மிதப்பு பாலத்தின் இரு பகுதிகளும் கம்பிகளின் ஆதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் உட்பட பிரதேச மக்கள் தமது அன்றாட பயண நடவடிக்கைகளுக்கு குறித்த மிதப்பு பாலத்தைப் பயன்படுத்துகின்றனர்.
Post a Comment