Header Ads

test

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழர்களை சேர்த்துகொள்ள வேண்டிய தேவையிருக்கவில்லை - யாழில் ஞானசார தேரர் தெரிவிப்பு.

 தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெறவேண்டும்.கண்டியச் சட்டம் முஸ்லிம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்த சட்டத்தை ஏற்படுத்துவோம்.எல்லா சட்டங்களிலும் இருக்கின்ற நல்ல விடயங்களை சேர்த்து ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டுமென ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர்(Gnanasara Thero) தெரிவித்தார்.

“ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள் நேற்று வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இந்த பணி இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஒன்றுபட எந்த அரசியல்வாதிகளும் விரும்பவில்லை ஆகவே ஒரே நாடு ஒரே சட்டத்தையும் அவர்கள் விரும்பவில்லை. போதைப் பொருளால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். விளக்கேற்றுவதற்காக கேட்கும் அரசியல்வாதிகள் போதைப் பொருள் தடுப்பு மத்திய நிலையத்தை உருவாக்க தயாரில்லை.

தமிழர்களது பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் என்ன செய்கிறார்கள். கடந்த 19ஆம் திகதி அன்று கார்த்திகை விளக்கீடு நிகழ்விலே பாதுகாப்பு தரப்பினர் தலையீடு செய்தமை தொடர்பில் அது சம்பந்தமான விளக்கத்தை நாம் பெறுவோம்.

ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியில் தமிழர்களை முதலில் சேர்க்காமல் எதிர்ப்புக்கள் வந்த பின்னர் சேர்த்தமை தொடர்பாக கேள்வியெழுப்பிய பொழுது,

இந்த செயலணியை ஆரம்பித்த பொழுது பிரச்சனை ஒன்றாகவே இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் தமிழர்களை நியமிக்கவேண்டிய தேவையிருக்கவில்லை. பொதுவாகவே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒரே பிரச்சினையே காணப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களை தெரிவு செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. முஸ்லிம்களுக்கு பல சட்டங்கள் இருப்பதால் அந்த சட்டத்தை பொதுச் சட்டத்தின் கீழ் கொண்டுவர விரும்பினோம்.

பல்வேறு சட்டங்கள் இருப்பதால் அதனை ஒரு சட்டமாக்க விரும்புகிறோம். கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

இதன்போது ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் உறுப்பினர்களான யோகேஸ்வரி பற்குணராஜா(Yogeshwari Pargunaraja), ஐயம்பிள்ளை தயானந்தராஜா(Iyampillai Dayanandaraja) உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


No comments