மஞ்சள் கோட்டை கடந்தால் வாகனம் நிற்குமென நம்பினோம் - கிளிநொச்சி விபத்தில் காயமடைந்த மாணவியின் நேரடி வாக்குமூலம்.
இ.போ.ச பேருந்து கட்டுப்பாட்டை மீறிய வேகத்தில் வந்ததன் காரணத்தினாலேயே தனது நண்பி மதுசாலினி மீது குறித்த பேருந்து மோதியதாலேயே பரிதாபமாக பலியானதாக, கிளிநொச்சி விபத்தில் காயமடைந்த மாணவி கீர்த்தனா கண்ணீருடன் கவலை வெளியிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் அதி வேகத்தில் பயணித்த இ.போ.ச பேருந்தால் பாடசாலை சென்றுகொண்டிருந்த மாணவிகள் மஞ்சள் கோட்டை கடக்கையில் ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
அத்தோடு அம்மாணவியுடன் சென்ற மற்றைய மாணவியான கீர்த்தனா படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் பணிப்பாளர் கே.சத்தியமூர்த்தியின் அனுமதியுடன் இணையவழி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கு பற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது அம்மாணவி மேலும் கூறுகையில்,
பல ஆசைகளின் மத்தியில் தான் நாங்கள் பாடசாலை போனோம் மஞ்சள் கோட்டை கடந்தால் வாகனம் நிற்கும் என்ற நம்பிக்கையில் தான் அதனை கடக்க போனோம்.
நாங்கள் முதலாவது கால் வைக்க முதலாவதாக வந்த வாகனம் நின்றது. தொடர்ந்து நடந்தோம் அடுத்த அடி வைக்க அடுத்த வாகனமும் நின்றது. மூன்றாவதாக வந்த இ.போ.ச பேருந்து தான் சரியான வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்தியது.அது வேகமாக வராட்டி விபத்து நடந்திருக்காது நண்பியும் தப்பி இருப்பார். என்னுடைய நண்பி மதுசாலினிக்கு சிகிச்சைகள் செய்தும் பலனளிக்கவில்லை என மாணவி கீர்த்தனா கண்ணீருடன் தெரிவித்தார் .
கிளிநொச்சியில் இடம்பெற்ற மாணவிகள் மீதான விபத்தின் போது மஞ்சள் கோட்டில் பயணித்த மாணவி மதுசாலினி பலத்த காயங்களுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் விபத்தில் படுகாயமடைந்த மாணவி, வீதி விபத்துக்களைத் தடுப்போம் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கு பற்றிய போதே குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடலானது செயல்நிலைக்கான திட்டங்களை முன்மொழியும் வகையில் 100 பேர் மட்டுப்படுத்தப்பட்டு கலந்துரையாடினார்கள். அதில் பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர், வைத்தியர்கள் மற்றும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த புலம்பெயர்தோரும் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment