ATM இயந்திரத்தில் வைப்பிலிடச் சென்ற 6 கோடி ரூபா பணம் துணிகரக் கொள்ளை.
ATM இயந்திரத்தில் வைப்புச் செய்ய சென்ற 6 கோடி ரூபா பணத்துடன் வானைக் கடத்திய சாரதியை, ஹட்டன் நகரில் வைத்து நேற்று மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின் ஏரிஎம் இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கண்டியிலிருந்து தனியார் நிறுவனம் ஒன்றினால் கொண்டுவரப்பட்ட பணமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த தனியார் நிறுவனத்தின் அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் ஏரிஎம் இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிடுவதற்காக நேற்று பகல் ஹட்டனுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அதிகாரியும், பாதுகாப்பு ஊழியரும் வாகனத்திலிருந்து இறங்கியபோது , சாரதி பணத்துடன் தப்பிச்சென்றுள்ளார்.
இதனையடுத்து நிறுவனத்தின் அதிகாரியும், பாதுகாப்பு ஊழியரும் குறித்த நபரை பின்தொடர்ந்து தலவாக்கலை – லிந்துலை வழியாக அம்பேவல பகுதிக்கு வாகனம் செல்வதை, தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்துள்ளனர்.
அது தொடர்பில் உடனடியான பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து நுவரெலியா பதுளை பிரதான வீதியில் கெப்பட்டிபொல ரேந்தபொல பகுதியில் வைத்து நுவரெலியா விசேட அதிரடிப்படையினரால் வாகனம் வழிமறிக்கப்பட்டு சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் கைதான சாரதியையும், பணத்தெகையையும், வாகனத்தையும் கெப்பட்டிபொல பொலிஸ் நிலையத்தில் வைத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபரையும், பணத்தொகையையும் ஹட்டன் பொலிஸார் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில், முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment