இலங்கையில் அச்சுறுத்தலாக மாறியுள்ள புதிய வகை நோய்.
இலங்கையில் கொரோனா தொற்று தணிந்துவரும் நிலையில் மறுபுறத்தில் டெங்கு நோயும், எலிக்காய்ச்சலும் மக்களை அச்சறுத்தத் தொடங்கியுள்ளன.
கடந்த ஜுன் மாதம் முதல் கடந்த 20ஆம் திகதிவரையான 04 மாதங்களிற்குள் இலங்கையில் எலிக்காய்ச்சல் காரணமாக 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 250 நோயாளர்களும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் மாவநெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
இதேவேளை, இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து அமுல்படுத்துமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசமாக மேல் மாகாணம் பதிவாகியுள்ளதுடன், கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் இருந்தும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மேல் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment