வீதியில் இறங்கி போராட தயாராகும் அதிபர் ஆசிரியர்கள்.
எதிர்வரும் 6ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச ஆசிரியர் தினத்தன்று,நாட்டிலுள்ள 312 கல்வி வலயங்களை மையப்படுத்தி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (03) ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டார்.
குறிப்பாக ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினை மற்றும் நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாத்தல் ஆகிய இரண்டு விடயங்களை முன்னிலைப்படுத்தியே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தாம் போராட்டத்தை முன்னெடுத்து 84 நாட்கள் கடந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தமது பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை எனவும் தெரிவித்தார்.
பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டுமாயின், ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி தீர்வொன்றை பெற்றுக்கொடுக்குமாறு ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 6ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச ஆசிரியர் தினத்தன்று, அதிபர்களும் போராட்டத்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது வீடுகளுக்கு முன்பாக கறுப்பு கொடியை ஏற்றி, தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நாடு பூராகவும் சுமார் 11,200 அதிபர்கள் உள்ளதாகவும், அனைத்து அதிபர்களும் தமது போராட்டத்தில் இணைந்துக்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரி இந்த போராட்டம் தொடங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment