தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தால் தப்பி ஓடிய காணி ஆணையாளர்.
மட்டக்களப்பு-வாகரை காரமுனை பகுதியில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில், வெளி மாவட்ட சிங்கள மக்களை திட்டமிட்டு மிகவும் இரகசியமான முறையில் குடியேற்ற எடுத்த முயற்சியை எதிர்த்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது .
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 பேருக்கு காணி வழங்குவதற்கு இன்று காலை புனானை வனவிலங்கு திணைக்கள கட்டிடத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அங்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் இணைந்து குறித்த காணி வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
புனானையில் காணி தொடர்பாக தகவல் பதிவுசெய்யப்பட்ட மக்களை அழைத்து கார முனைக்கு தமது இடங்களை காண்பிக்க சென்றபோது, ஆணையாளருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு ஆர்ப்பாட்டமாக மாறியிருந்தது.
இதன்போது அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை உடன் நிறுத்தக்கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஆணையாளர் குறித்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கம் சார்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்த போதும் ஒருவர் இந்தியாவிலும் மற்றவர் கொழும்பிலும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சிங்கள குடியேற்றம் திட்டமிட்டு இடம்பெறுவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment