கிளிநொச்சியில் ஆச்சரியத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வீதி.
கிளிநொச்சி தர்மபுரம் கிராமத்தில் 7 ஆம் ஒழுங்கை (2020) கடந்த வருடம் 7-ஆம் மாதம் தார் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டு ஒரு வருடத்திற்குள் முற்று முழுதாக சேதமடைந்து காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள தர்மபுரத்தில் அமைந்துள்ள வீதியே இவ்வாறான அவலநிலையில் காணப்படுகின்றது.
நிறைந்த கிராமம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தினால் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு கரைச்சி பிரதேச சபையின் தொழிநுட்ப மேற்பார்வையில் பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
வீதி புனரமைப்புக்கான ஒப்பந்தத்தை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் பெற்றிருந்தாலும் வீதி புனரமைப்பு பணிகளை தனியார் ஒப்பந்தகாரர் ஒருவர் மேற்கொள்வதற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் அனுமதி வழங்கியிருந்திருந்தது. எனவே குறித்த வீதியின் பணிகள் (2020) கடந்த வருடம் 7ஆம் மாதம் நிறைவு பெற்றிருந்தது.
ஒப்பந்த காலத்தில் புனரமைப்பு பணிகளின் தொழிநுட்ப மேற்பார்வை மற்றும் கொடுப்பனவுகளுக்கான சிபார்சுகளை கரைச்சி பிரதேச சபையே மேற்கொண்டிருந்தது. ஆனால் குறித்த வீதியின் தரமற்ற புனரமைப்பு காரணமாக ஒரு வருடத்திற்குள் முற்று முழுதாக சேதமுற்று பொது மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறது.
எனவே இது தொடர்பில் பிரதேச பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, மேற்பார்வை மற்றும் தொழிநுட்ப கண்காணிப்பினை மேற்கொண்ட கரைச்சி பிரதேச சபையின் மீதும் தங்களது விசனத்தை தெரிவித்துள்ளனர். முறைகேடனான அபிவிருத்திப் பணிகளை கண்டுகொள்ளதாக திணைக்களங்கள் மீதும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
Post a Comment