Header Ads

test

இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களால் தமிழர் நிலம் இரவோடு இரவாக அபகரிப்பு.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சவுக்கடி, புன்னைக்குடா, களுவன்கேணி பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களை அச்சுறுத்தி இரவோடு இரவாக சுமார் 10 கிலோமீட்டர் வீதி அமைக்கப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக புன்னைக்குடா பிரதேசத்தில் உள்ள அரச தனியார் காணிகளை எந்த வித அனுமதியும் இன்றி இஸ்லாமிய அடிப்படைவாத குழுவைச் சேர்ந்த சிலர் கம்பி வேலிகள் கொண்டு அடைத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நிறுத்துமாறு ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் ஏறாவூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் அது தடுத்து நிறுத்தப்படவில்லை.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

அரபு நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத குழு ஒன்று தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளுக்கு போலி உறுதிகளை முடித்து அதனை ஆக்கிரமித்து இஸ்லாமிய அடிப்படைவாத பள்ளிகளை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை இவ்வாறு அபகரித்து அவற்றை இரவோடு இரவாக அடைத்து குறித்த காணிகளுக்கு சுமார் 10 கிலோமீட்டர் வரையான வீதிகளையும் போட்டுள்ளனர்.

பிரதேச சபை மற்றும் அரச திணைக்களங்களில் எந்த வித அனுமதியும் பெறாமல் நடைபெறும் மேற்படி சட்டவிரோத வேலைத்திட்டங்களை உடன் நிறுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும் அதனை பொருட்படுத்தாமல் குறித்த பகுதியில் வீதிகளை நிறுவி வருகின்றனர்.

காணி மாபியாக்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்காக ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் சர்வானந்தன் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு குறித்த பகுதியில் வீதி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த இரண்டு வாகனங்களை ஏறாவூர் காவல்துறையிடம் பிடித்து கொடுத்ததுடன் மேற்படி பிரதேசத்தில் நடைபெறும் சட்டவிரோத வீதி அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்துமாறு ஏறாவூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

ஆனால் முறைப்பாடு செய்த மறுநாள் இரவோடு இரவாக இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களை சேர்ந்த காணி மாபியாக்கள் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு வீதிகளை அமைத்துள்ளதோடு பச்சை மரங்களை கொண்டு கம்பி வேலிகளையும் அமைத்துள்ளனர்.

இது குறித்து மீண்டும் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் சர்வானந்தன் ஏறாவூர் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேவேளை குறித்த பகுதியில் உள்ள தமது காணிகளை அடைப்பதற்கு இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.





No comments