மன்னார் பொலிஸாரின் காவிலில் இருந்த கைதியின் உயிரிழப்பிற்கு பொலிஸாரே காரணமென கதறும் உறவுகள்.
மன்னாரில் காவல்துறை பாதுகாப்பில் இருந்த சந்தேக நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் எருக்கலம்பிட்டி - புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் வைத்து மன்னார் காவல்துறையால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மன்னார் எருக்கலம்பிட்டி தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ரம்ஸான் வயது-29 என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முச்சக்கர வண்டியில் புதுக் குடியிருப்பு பகுதிக்குச் சென்று மீண்டும் எருக்கலம்பிட்டி கிராமத்தை நோக்கி வந்துள்ளனர். இதன் போது எருக்கலம்பிட்டி-புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த மன்னார் காவல்துறை இருவரையும் மறித்து முச்சக்கர வண்டியை சோதனையிட்டுள்ளனர்.
இந்நிலையில் போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் கைது செய்து மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் இருவரையும் இன்றைய தினம் காலை மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் ரம்ஸான் என்ற இளம் குடும்பஸ்தருக்கு திடீர் சுகயீனம் எற்பட்டுள்ளதுடன் உடனடியாக அவரை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் காவல்துறையினர் அனுமதித்தனர். இந்த நிலையிலேயே மாவட்ட பொது வைத்தியசாலையில் அவர் உயிரிழந்தார். குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்க கூடும் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment