Header Ads

test

இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படையினரின் அத்துமீறல்களை விசாரணை செய்யும் மனித உரிமை ஆணைக்குழு.

 வடமாகாணத்தில் ஸ்ரீலங்கா காவல்துறை மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை மற்றும் மன்னாரில் கடற்படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்மை தொடர்பாகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் கடந்த 23 ஆம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியில் அஞ்சலி செலுத்த சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் கைதுக்குரிய காரணம், கைது செய்யப்பட்ட போது கைப்பற்றப்பட்ட பொருட்கள், நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பீ அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண காவல் நிலைய தலைமை காவல் பரிசோதகருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை மன்னார் பேசாலை வங்காலைப்பாடு கிராமத்தில் உள்ள கடற்தொழிலாளர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான பூரண விளக்க அறிக்கை ஒன்றினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பேசாலை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் பேசாலை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் அறிக்கையும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இரு முறைப்பாடுகளும் 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணயாக பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


No comments