Header Ads

test

அக்டோபர் - 03 உலக மதுவிலக்கு தினம் - போதைப்பொருள் பாவனையும் சமூக சீர்கேடுகளும்.!!!

 நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு பிரதான காரணியாக இருப்பது போதைப் பொருட்கள். இவற்றை ஒழிப்பதன் மூலம் வன்முறை சம்பவங்களை குறைக்க முடியும்.

ஒரு சமூகம் குற்றங்கள் அற்ற சமூகமாக இருக்க வேண்டுமானால் அங்கு போதைப் பொருட்கள் இல்லாது இருக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனையால் எமது சமூகம் எதிர்கொள்ளும் தீவினைகள்.!!!

* குறிப்பு சட்டகம்

* முன்னுரை

* போதை பாவனையும் சமூக சீர்கேடுகளும்

* இன்றைய இளம் சமுதாயமும் போதை பாவனையும்

* போதையை தடைசெய்ய வேண்டியதன் அவசியம்

* முடிவுரை

* முன்னுரை

இன்றைய சமூகத்தில் எல்லாவிதமான குற்ற செயல்களுக்கும் காரணமாக இருக்கும் விடயம் இந்த போதை பொருள் பாவனையாக தான் இருக்க முடியும்.

இன்றைய சமூகத்தில் வாழ்கின்றவர்களில் போதைக்கு அடிமையாகாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கின்றது என்றால் வியப்பதற்கில்லை.

இன்றைக்கு இப்பழக்கம் இளைஞர்களிடம் அதிகளவில் திட்டமிடப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. போதைப்பொருட்கள் எனும்போது மதுபானம், புகையிலை மற்றும் போதைவஸ்துக்கள் உள்ளடங்கும்.

இது பாவிப்பவரினை அடிமைப்படுத்தி அந்த சமூகத்தையே சீரழித்து விடும். இக்கட்டுரையில் போதை பாவனையும் சீர்கேடுகளும், இன்றைய இளம் சமுதாயமும் போதை பாவனையும், போதையை தடைசெய்ய வேண்டியதன் அவசியம் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

போதைப்பாவனையும் சமூக சீர்கேடுகளும்.!!!

போதைப்பாவனையானது ஒருவரை அதற்கு அடிமையாக்கிவிடும். அவரது வருமானம் முழுவதையும் இதற்கெனவே செலவிட்டு அவர்களது உடலையும் கெடுத்து கொள்வார்கள்.

மதுப்பாவனையால் உடல்பருமன், ஈரல், குடல், சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு விரைவில் நோயாளியாகி இறக்கும் நிலையானது ஏற்படுகிறது.

இதனால் தான் “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடு” என பல விளம்பரங்களை ஆங்காங்கே பல இடங்களில் காணமுடியும். இவற்றை பார்த்தும் யாரும் திருந்துவதாக இல்லை.

நாட்டின் பல இடங்களில் இன்றைக்கு மதுபான சாலைகள் பெருகிவிட்டன. மதுபானம் இன்றைக்கு பெரும் வியாபாரமாக மாறிவிட்டது. இதனால் பல குடும்பங்கள் வறுமையாலும் பல குடும்பங்களில் பிரச்சனைகள் தோன்றவும் நாட்டில் களவு, கொலை, விபத்துக்கள் இடம்பெறவும் மதுப்பாவனை ஒரு பிரதான காரணமாகும்.

அது மாத்திரமின்றி பல இளைஞர்கள் கல்வி கற்க வேண்டிய சிறுவர்கள் கூட தமது கல்வியை இடைநிறுத்தி விட்டு மதுப்பாவனைக்கு அடிமையாகி திரிவதை நாம் அவதானிக்கலாம்.

அதனைபோலவே “சிகரட், கஞ்சா” போன்ற புகைத்தல் பொருட்கள் பாவிப்பதனால் அவர்கள் இளம் வயதிலேயே இதற்கு அடிமையாகி பல குற்ற செயல்களில் ஈடுபட இதுவும் வாய்ப்பாக அமைகிறது.

சிறுவயதில் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபடுவதனால் இவர்களின் கல்வி எதிர்காலம் தொழில்வாய்ப்புக்கள் இல்லாமல் போய் அவர்களை நம்பியுள்ள குடும்பங்களும் வேதனை அடைய செய்வதாக போதைப்பாவனைகள் அமைகிறது.

இவ்வாறான போதைக்கு அடிமையானவர்கள் “கொலை, களவு, கொள்ளை, பெண்கள் மீதான வன்முறை” போன்றவற்றை செய்யும் அரசியல் அடிமைகளாக இன்றைக்கு சமூகத்தில் காணப்படுகின்றனர்.

இன்றைய இளம் சமுதாயமும் போதைப்பாவனையும்.!!!

இன்றைக்கு இளம் சமுதாயம் இந்த போதை பாவனைக்கு அதிகளவில் அடிமையாகி இருப்பதனை அவதானிக்க முடிகிறது.

நாட்டினுடைய வருங்காலத்தை தீர்மானிக்க வேண்டிய இளம் சமுதாயத்தினர் கல்வி கற்று நல்ல சமுதாய பிரஜைகளாக மாறவேண்டும் என்பதுவே ஒவ்வொரு பெற்றோர்களினுடைய கனவாகும்.

அதற்காக அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு பல தியாகங்களை செய்து தமது பிள்ளைகளை வளர்த்து கல்வி கற்க அனுப்புவார்கள்.

ஆனால் இன்றைய காலத்து இளைஞர்கள் சிறுவயதிலேயே சில சமூகவிரோதிகளான மதுப்பாவனையில் ஈடுபடும் நண்பர்களோடு சேர்ந்து போதைப்பழக்கத்துக்கு சிறிது சிறிதாக ஆரம்பித்து போதை இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு அவர்களை கொண்டுபோய் நிறுத்தும் பெருமைக்குரியது இப்போதைப்பாவனை.

இதனால் ஏதுமறியாத சிறுவர்கள் கூட தமது எதிர்காலத்தை இழந்து நிற்கும் நிலையானது மிகவும் வேதனைக்குரியது.

போதைக்கு அடிமையானவர்கள் இயல்பாகவே சமூகத்தால் வெறுக்கப்பட்டு இயல்பாக சந்தோசங்களை இழந்து இயற்கையான அழகை இழந்து அருவருக்க தக்க மனிதர்களாக போதைப்பாவனை மாற்றிவிடும்.

போதையை தடைசெய்யவேண்டியதன் அவசியம்.!!!

சாதாரணமாக வருடமொன்றிற்கு உலகளவில் 11.8 மில்லியன் மக்கள் போதைப்பாவனை காரணமான நோய்களால் இறந்து போகின்றனர். 350000 இறப்புக்கள் மதுப்பாவனையால் நிகழ்கின்றன.

இவ்வாறு பல உயிரிழப்புக்களுக்கும் நோய்நிலமைகளுக்கும் பலபேருடைய குடும்பங்கள் சீரழிவாகட்டும் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுதல் ஆகட்டும் இவற்றுக்கெல்லாம் காரணமான போதைப்பொருட்களை தடைசெய்யவேண்டியது மிகவும் அவசியமாகும்.

பொது இடங்களில் புகைத்தல், மதுபானம் அருந்துதல் தடைசெய்யப்பட்டுள்ளது. போதைப்பாவனைக்கு எதிராக பல சட்ட நடைமுறைகள் காணப்பட்டாலும் இதனை மக்கள் மதிப்பதாக இல்லை.

அதற்கேற்றால் போல் அரசாங்கமும் பொறுப்பான அதிகாரிகளின் இலஞ்சம் போன்ற சட்டவிரோத செயல்களால் போதைப்பாவனை அதிகமாகி கொண்டே செல்கிறது.

இதனால் தான் அரசாங்கங்களுக்கு அதிக வருமானமானது கிடைக்கிறது. உடனடியாக போதைப்பாவனையை தடுத்து நிறுத்தாது விடின் இதனால் பாரிய பின்விளைவுகளை எமது சமூகம் எதிர்கொள்ளும்.

முடிவுரை.!!!

போதைப்பாவனைகளால் எமது சமூகம் சீரழிவது மறுக்கமுடியாத உண்மை இதற்கு அடிமையானவர்கள் தமது வாழ்க்கையை இழப்பதுடன் தம்மை சார்ந்து இருப்பவர்களின் வாழ்வையும் படுகுழியில் தள்ளிவிடுகிறார்கள்.

ஆகவே எம்மையும் எமது உறவினர்களையும் நமது வருங்கால சமூகத்தையும் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

சட்டநடைமுறைகளை இறுக்கமாக்கி தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிப்பதுடன் போதைபொருட்களை விற்போர்களை கைது செய்து சிறையில் அடைப்பதனால் இக்குற்ற செயல்கள் குறைய வாய்ப்பிருக்கின்றது.

"அனைவரும் ஒன்றினைந்து போதையேற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்" - தமிழ்நாதம் நியூஸ்.


No comments