தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர தடை உத்தரவு பிறப்பித்துள்ள நீதி மன்றம்.
திலீபனின் நினைவேந்தலை நினைகூர மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராசா சரவணபவன், தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணபிள்ளை சேயோன், பேரின்பராசா ஜனகன், சுவீகரன் நிசாந்தன் ஆகிய நால்வருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் இந்த தடை உத்தரவை பிறப்பித்து கட்டளையிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நான்கு பேரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூரும் நடவடிக்கையை நேற்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை மேற்கொள்ள உள்ளதாக பொலிஸ் நிலைய புலனாய்வு உத்தியோகத்தர்களால் நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாகவும், இவ்வாறான நிகழ்வு நடந்தால் இதற்கு எதிரானவர்களால் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதால், நாட்டில் தற்போது கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதார நடவடிக்கையினை நாட்டு மக்கள் கடைப்பிடிக்க அவசியம் இருப்பதனால் இவ்வாறான நினைவுகூரல் நடவடிக்கை நடைபெறாமல் தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றிற்கு காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
இதன் பிரகாரம் குறித்த இடத்தில் 15ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள மேற்படி நடவடிக்கையினை பொலிஸார் தடுத்து நிறுத்தும் பொருட்டு தடை உத்தரவை பிறப்பிப்பதற்கு ஏதுக்கள் இருப்பது தொடர்பாக நீதிமன்றம் திருப்திப்படுவதனால் 1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்ட கோவையின் பிரிவு (106)1 கீழ் பொலிஸார் கோரியவாறு தடை உத்தரவு பிறப்பித்து கட்டளையிடப்பட்டுள்ளது.
Post a Comment