யாழில் இரண்டாயிரம் ரூபாவிற்காய் ஒன்று கூடிய மக்கள்.
யாழ்ப்பாணம், சுகாதார விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட்டி பணம் விநியோகித்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை யாழ் நெல்லியடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றது.
வதிரி- உடுப்பிட்டி வீதியிலுள்ள வீடொன்றில் பணம் விநியோகிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அப் பகுதிகளை சேர்ந்த மக்கள் உடுப்பிட்டி- வதிரி வீதியில் அந்த வீட்டின் இருபுறமும், அருகிலுள்ள ஒழுங்கைகள் அனைத்திலும் மக்கள் குவிந்திருந்தனர்.
நாடு முழுவதம் கொரோனா பரவல் ஆபத்தான கட்டத்தில் உள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதையும் பொருட்படுத்தாமல், வீட்டு உரிமையாளரான முதியவர் பண விநியோகத்தில் ஈடுபட்டார். இதன்போது ஒவ்வொருவருக்கும் 2,000 ரூபா வழங்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, திரண்ட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததுடன் வீட்டின் முன்பாகவும் பெருந்தொகையானவர்கள் குவிந்து காணப்பட்டனர்.
இதன்போது பலர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதுடன் யாரும் சமூக இடைவெளியையும் பேணவில்லை என்பதுடன் சுமார் 5,000 பேர் வரையில் அங்கு குவிந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து செயற்பட்ட நெல்லியடி பொலிசார் , மக்களை அகற்றியதுடன், வீட்டு உரிமையாளரை விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டிலுள்ள மகன் 2 கோடி ரூபா பணம் அனுப்பியதாகவும், அதனை ஒருவருக்கு 2,000 ரூபா வீதம் விநியோகித்து வருவதாகவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொரோன பெருந்தொற்றினால் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டும், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் வரும் சூழலில், இவ்வாறு பொறுப்பற்ற விதமாக பண விநியோகம் செய்தமையானது மக்களை மேலும் அபாயத்தில் தள்ளும் செயற்பாடு என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
Post a Comment