காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் கண்ணீரில் கரையும் நாட்கள்.
காணாமல்போன உறவுகளைத் தேடி அலைந்த பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டார்கள். நாங்களும் எங்கள் உயிரை எப்போது மாய்ப்பது என தெரியாமல் வாழ்ந்து வருகின்றோமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் யாழ் மாவட்ட இணைப்பாளர் சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார்.
நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தமுறை நடைபெறும் ஜெனிவாக் கூட்டத்தொடரின் மூலமாக எமது காணாமல் போன உறவுகளின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணப்படவேண்டும். நேரடியாக ஜெனீவா சென்று சாட்சியமளிக்க விட்டாலும் கூட இந்த கொரோனாக் காலத்தில் ஊடகங்கள் மூலமாக எங்களுடைய கருத்தை கொண்டு சேர்க்க விரும்புகின்றோம்.
1500 நாட்களுக்கு மேலாக அச்சுறுத்தல்களையும் தாண்டி எமது உறவுகளை தேடி போராடி வருகிறோம். ஜெனிவாவுக்கு சென்று எமது உறவுகளுக்காக நாங்கள் பலமுறை குரல் கொடுத்திருக்கிறோம்.
எமது கண்ணீருக்கு என்ன பதில்? காலா அவகாசமோ? கால நீடிப்போ? காணாமல் போனோர் அலுவலகமோ எமக்கு வேண்டாம். சிறிலங்கா அரசு மீது எங்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபையை நாடுகின்றோம்.
காணாமல்போன உறவுகளைத் தேடி அலைந்த பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டார்கள். நாங்களும் எங்கள் உயிரை எப்போது மாய்ப்பது என தெரியாமல் வாழ்ந்து வருகின்றோம்.
நாங்கள் 12 வருடங்களாக போராடி வருவது பணத்திற்காக அல்ல எங்களுடைய பிள்ளைகளின் உயிர்ப்பிச்சைக்காகவே. காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்த பெரிய சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் எங்களுடைய பிள்ளைகளை தயவுசெய்து மீட்டுத் தாருங்கள் என்றார்.
Post a Comment