Header Ads

test

இலங்கை விமான நிலையங்களைச் சூழ குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான படையினர்.

  கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு இன்று திடீரென மேலதிக படையினர் கொண்டு பலப்படுத்தப்பட்டது.  

தாக்குதல் ஒன்று நடாத்தப்படலாம் என கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் தகவல் ஒன்றுக்கு அமைய, இந்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நேற்று (14) இரவு விமான நிலையத்துக்கு கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் மின்னஞ்சல் ஒன்றுக்கு அமைய இந்த விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவயிடம் வினவிய போது, அது குறித்த எந்த தகவலும் தன்னிடம் இல்லை எனவும், தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விவகாரம் என்பதால் கிடைக்கும் அனைத்து தகவல்களும் ஊடகப் பேச்சாளருடன் பகிர்ந்துகொள்ளப்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

எவ்வாறயினும் உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றாக குறித்த தகவல் கிடைக்கப் பெற்றிருப்பினும், முன் கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் நிமித்தம் இவ்வாறு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 பாதுகாப்பு நடவடிக்கைகளில், விமானப்படையினர் மற்றும் விஷேட பொலிஸ் குழுக்கள் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில், இலங்கையில் ஐ.எஸ். ஐ.எஸ். மற்றும் தலிபான்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட குழுக்கள், நபர்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்துமாறு பொலிஸ் பிரதானிகள், அவர்களின் கீழ் உள்ள உளவுப் பிரிவுகளுக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.


No comments