பிரதமர் மஹிந்தவின் பெயரை பயன்படுத்தி அடாவடியில் இறங்கியுள்ள பிக்குகள்.
அநுராதபுரம் பிரதேசத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இணைப்புச் செயலாளர் என தெரிவித்து பௌத்த தேரர் உட்பட மேலும் சிலர் தேரர்கள் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தடுப்பூசி மருந்தை வழங்குமாறு கோரிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த பொது சுகாதார பரிசோதர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
கெக்கிராவ பிரதேச சுகாதார பரிசோதகர் தாக்குதலுக்கு உள்ளாகி தற்போது அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வருகைதந்த 3 தேரர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது அளவை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த பல்லேபெத்த நந்தரத்தன தேரர் உட்பட 3 தேரர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
நேற்றுமுன் தினம் கெக்கிராவ பிரதேசத்தில் எந்தவொரு தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. வெளியில் வேறு ஒரு இடத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்து விட்டு சுகாதார அதிகாரிகள் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்க்காக தயாராகும் வேளையில் தான் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட தேரருக்கு அந்த நேரத்தில் அங்கிருந்தவர்கள் சைனோபார்ம் தடுப்பூசியில் 5 பெட்டிகள் மாத்திரமே இருப்பதாகவும், அதில் ஒரு அளவை மாத்திரம் வெளியில் எடுத்தால் ஏனையவை வீணாகிவிடும் என தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இதை சரியாக புரிந்து கொள்ளாத தேரர் தான் பிரதமர் உடைய இணைப்பு செயலாளர் என கூறி தாக்கியுள்ளார்.
முக்கியமாக இந்த தேரர் பிரதமருடைய பெயரை பயன்படுத்தி இந்த செயலை செய்துள்ளார். ஆகவே இது சம்பந்தமாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment