பொது போக்குவரத்து தொடர்பில் கருத்து தெரிவித்த திலும் அமுனுகம.
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து பொது போக்குவரத்து சேவையினை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய நிபந்தனைகளுடன் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆசன அடிப்படையில் மாத்திரம் பயணிகள் பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்த முடியும்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், சேவையாளர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து மற்றும் சமூதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய பொது போக்குவரத்து சேவையினை ஆரம்பிப்பதற்கான திட்டங்களை முன்வைக்குமாறு போக்குவரத்து அமைச்சிடம் கோரியுள்ளார்கள். இதற்கான பொறுப்பு தனியார் மற்றும் அரச போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சினால் வகுக்கப்படும் திட்டம் கொவிட்-19 ஒழிப்பு செயலணியிடம் ஒப்படைக்கப்படும். நிபந்தனைகளுடன் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் போது ஆசன அடிப்படையில் மாத்திரம் பயணிகள் பயணம் செய்வது கட்டாயமாக்கப்படும்.
நாட்டு மக்கள் அனைவரது நலனையும் கருத்திற் கொண்டு ஆசன அடிப்படையில் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்க போக்குவரத்து கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற 180 பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டு இதுவரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகளுடன் கிடைக்கப்பெறும் அனுமதியை பொது போக்குவரத்து சேவையில் முறையாக பயன்படுத்தாவிட்டால் அனுமதி கிடைக்கப் பெற்ற அடுத்த செயலணி கூட்டத்தில் வழங்கப்பட்ட அனுமதி இரத்து செய்யப்படும். ஆகவே அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
ஆசன அடிப்படையில் பேருந்து சேவையை முன்னெடுக்கும் போது நட்டம் ஏற்படும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இருப்பினும் மாற்று வழிமுறைகள் ஏதும் தற்போது கிடையாது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், சேவையாளர்களுக்கும் நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
Post a Comment