Header Ads

test

பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் விடுமுறை விடுதியின் பொறுப்பாளராக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரை கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் ஆலோசனை கிடைக்கும் போது குறித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தற்போது பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்று, மேல் மாகாணத்தில் கடமையாற்றுவதாக அந்த தகவல்கள் உறுதி செய்தன.

எவ்வாறயினும் சம்பவம் இடம்பெற்ற கடந்த 2019 பெப்ரவரி மாதம் அவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றியுள்ளதாகவும் அந்த தகவல்கள் உறுதி செய்தன. சம்பவம் பதிவான கடந்த 2019 இல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர், தனது குடும்பத்தாருடன் நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று அங்கு பொலிஸ் விடுமுறை விடுதியில் தங்கியுள்ளார்.

இதன்போது அங்கு இடம்பெற்ற சம்பவம் ஒன்றினை மையப்படுத்தி, அவ்விடுதிக்கு பொறுப்பாக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் தயாநந்த அழகப்பெரும எனும் பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார்.

இது தொடர்பில் அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விசாரணைகளின் போது,

பன்றி இறைச்சிக் கறி சமைத்து தருமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கோரியதற்கமைவாக  ஒரு தொகை இறைச்சியை கையளித்துள்ளதாகவும், அதனை சமைத்துக் கொடுத்த பின்னர் இறைச்சி போதுமானதாக இல்லை எனவும் தான் வாங்கிக்கொடுத்த இறைச்சியை விடுமுறை விடுதியில் உள்ள கடை நிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோசடியாக சுவைத்துள்ளதாகவும் அதனாலேயே கறி போதாமல் போயுள்ளதாகவும் கூறி குறித்த  தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

விசாரணைகள் நிறைவில் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு கோவையை சட்ட மா அதிபரிடம் ஆலோசனைப் பெற அனுப்பி வைத்துள்ள நிலையிலேயே தற்போது அதற்கான ஆலோசனைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

 இதன் போதே தாக்குதல் நடாத்திய உயர் பொலிஸ் அதிகாரியைக் கைது செய்து நுவரெலியா நீதிமன்றில் ஆஜர் செய்ய ஆலோசனை வழங்ப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இச் செய்தி எழுதப்படும் வரை தற்போது பிரதிப் பொலிஸ் மா அதிபராக உள்ள குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.   


No comments