மனதை பதறவைக்கும் சிறுவன் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் - இப்படியான மனிதர்களும் சமூகத்தில் உள்ளார்களா.?
மன்னார் -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (14) எனும் சிறுவன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்ட நிலையில் வீட்டின் சுவாமி அறையில் மீட்கப்பட்டுள்ளார்.
கள்ளியடியில் உள்ள கிராம அலுவலகர் ஒருவரின் அரிசி ஆலை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான முரண்பாட்டின் காரணமாக குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் குறித்து பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் எனும் சிறுவன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த 5,000 ரூபா பணம் காணாமல் போயிருந்தது.
சிசிரிவி கமராவின் உதவியுடன் அரிசி ஆலையின் உரிமையாளர்கள் ஆராய்ந்ததில், 14 வயது சிறுவன் பணத்தை எடுத்தது தெரிய வந்தது. இதுபற்றி சிறுவனின் உறவினர்களிடம் அரிசி ஆலை உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டபோது, அந்த பணத்தை மீள ஒப்படைப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். எனினும், அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் மற்றும் மகனின் நண்பர்கள் இருவர் என மூவர், சிறுவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர். சிறுவனின் சுகயீன நிலைமையை குறிப்பிட்டு, தாக்குதல்தாரிகளின் காலில் விழுந்து சிறுவனின் தாயார் மன்றாடியுள்ளார்.
எனினும், குறித்த கும்பல் தாக்கிவிட்டே சென்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் 17, 18 வயதுடையவர்கள். அவர்கள் சென்ற பின்னர், மகனை நித்திரையாக்கி விட்டு தாயார் குளிக்கச் சென்றுள்ளார். அவர் வீட்டுக்குள் நுழைந்த போது, சிலர் வீட்டின் பின்பக்கத்தால் தப்பியோடுவதை அவதானித்ததாக தெரிவிக்கின்றார். வீட்டுக்குள் அவர் சென்று பார்த்தபோது, மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் தாயார் தெரிவிக்கின்றார். இது தற்கொலை அல்ல எனவும் மகன் தற்கொலை செய்யுமளவுக்கு விபரம் தெரியாதவர் எனவும் தாய் தெரிவிக்கின்றார்.
சிறுவனின் மரணம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை இலுப்பைகடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment