தடுப்பூசிக்காக காத்திருந்த மக்கள் மீது பொலிஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டனரா - சம்பவ இடத்தில் பதற்றம்.
வெலிகமவில் தடுப்பூசி செலுத்த காத்திருந்த நபர் ஒருவரை தடியால் அடிப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் முயல்வதைக் காண்பிக்கும் வீடியோ குறித்து பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
தடுப்பூசியை பெற வந்திருந்த ஒருவர் சுகாதார அதிகாரி மீது தாக்குதல் நடத்த முயன்ற வேளை அதனைத் தடுப்பதற்காக தாங்கள் தலையிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகம பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த பொலிஸார் பொதுமக்கள் மீது தடியடிப் பிரயோகம் மேற்கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரபா மத்திய கல்லூரியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட குழப்ப நிலையைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகளை பாதுகாப்பதற்காக பொதுமக்களை வெளியேற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நாங்கள் உடனடியாக செயற்பட்டிருக்காவிட்டால் மருத்துவர்களும் தாதிமார்களும் தாக்கப்பட்டிருப்பார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸார் அந்த நிலையத்தில் இரண்டாவது டோஸினை வழங்கப்போவதாக அதிகாரிகள் முதலில் அறிவித்தனர்,எனினும் அவர்கள் முதல் டோஸினையே வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து அதனை பெறுவதற்காக பெருமளவு மக்கள் அந்த நிலையத்திற்கு விரைந்ததால் குழப்பநிலை ஏற்பட்டதாகவும், எனினும் தாங்கள் பொதுமக்கள் எவரையும் தாக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment