சிறுவனை கொடூரமாக தாக்கிய நபர் கைது - கிளிநொச்சி பளையில் சம்பவம்.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் நேற்றைய தினம்14 வயது சிறுவனொருவர் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அப்பகுதியில் தொடர்ச்சியாக அனைவருடனும் முரண்பட்டு வரும் நபரொருவரே சிறுவனை தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நபரொருவர் அண்மைக்காலமாக பளையில் வசித்து வரும் நிலையில் குறித்த நபர் கிராமத்தில் உள்ள அநேகமானவர்களுடன் வீண் தகராறுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக குறித்த நபர் மீது பளை பொலிஸ் நிலையத்தில் அதிகளவான வழக்குகளும் பதிவாகியுள்ள இந் நிலையில் நேற்று மாலை குறித்த சிறுவனின் தாயாரை அதே நபர் தகாத வார்த்கைளால் பேசிய நிலையில் மகன் ஆத்திரமடைந்து நியாயம் கேட்பதற்காக சென்ற போது கடுமையாக தாக்கியுள்ளார்.
தாக்குதலில் சிறுவன் கழுத்தில் கடும் காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு பிரிவினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment