யாழில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.
மொட்டையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டதனால்தான் இளம் குடும்பத்தலைவரின் உயிரிழப்புக்கு காரணம் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ வல்லுநரினால் அறிக்கையிடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதனால் சம்பவ இடத்துக்கு அண்மையாக உள்ள கட்டடத் தொகுதியில் பெறப்பட்ட சிசிரிவி பதிவின் அடிப்படையில் மடத்தல் (பெரிய சுத்தியல்) உடன் பயணித்த சந்தேக நபரே இளம் குடும்பத்தலைவரை தலையில் தாக்கி கொலை செய்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் வீதியோரம் சுயநினைவற்ற நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார். அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்த்த போது, உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.
சம்பவ இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் வீதியில் தரித்து நின்றுள்ளது. சம்பவத்தில் நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது-24) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார். சம்பவத்தையடுத்து அங்கு திரண்ட உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்து சந்தேக நபரை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் நண்பகல் இடம்பெற்ற இறுதிக் கிரியை வீடொன்றில் சிலருடன் அவர் முரண்பட்டுக் கொண்டார் என்றும் அவர்களே அவரை கொலை செய்துள்ளனர் என்றும் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சம்பவ இடத்துக்கு அண்மையாக உள்ள கட்டடத் தொகுதியில் பெறப்பட்ட சிசிரிவி பதிவின் அடிப்படையில் மடத்தல் (பெரிய சுத்தியல்) உடன் பயணித்த நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்றிரவு முற்படுத்தப்பட்டார். அவரை 14 நாள்கள் கட்டுக்காவலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மொட்டையான ஆயுதம் ஒன்றினால் தலையில் தாக்கப்பட்டதனால் இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ வல்லுநரினால் அறிக்கையிடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதனால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரே இந்தக் கொலையை செய்துள்ளார் என்று சந்தர்ப்ப சூழல்நிலையின் அடிப்படையில் தம்மால் நிரூபிக்க முடியும் என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment