காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தல்.
சிறிலங்கா இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும், சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, தமிழர் தாயகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், காணாமல் போனவர்களுக்கு இழப்பீட்டை வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
காணாமல் போனவர்கள் எந்த காரணத்திற்காக காணாமல்போனார்கள் என்பதை பற்றி விசாரிக்கத் தேவையில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துலக வலிந்து காணாமல் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று நீதி அமைச்சர் அலி ஷப்ரி உரையாற்றியுள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை போலல்லாது காணாமல் போனோர் அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் தொடர்பாக அரசாங்கம் கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவர் எத்தகைய சூழலில் காணாமல் போனார் என்பதை பார்க்காது, காணாமல்போனோரை அடையாளம் கண்டு இழப்பீட்டை வழங்கவுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் சிறிலங்கா பிரஜைகள் என்பதை மனதில் வைத்து, இவ்வாறான சம்பவம் மீண்டும் நிகழாமலிருப்பதை உறுத்திப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
யுத்தம் முடிவுக்கு வந்து 12 வருடங்கள் கடந்தபோதிலும் இன்னும் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் இருப்பது, நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமென நீதியமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment