ஞானசார தேரர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பேராயர் இல்லம் வலியுறுத்தல்.
உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களைப் போன்ற மற்றுமொரு பயங்கரவாதத்தாக்குதல் நாட்டில் இடம்பெறப்போவதாக , ஞானசார தேரர் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பேராயர் இல்லம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜனாதிபதிக்கு ஏற்கனவே அறிவித்திருப்பதாக ஞானசாரதேரர் கூறியிருக்கும் நிலையில், அடுத்தகட்ட விசாரணைகள் தொடர்பில் தெளிவுபடுத்தல்களைச் செய்யவேண்டும் என பேராயர் இல்லத்தின் ஊடகப்பேச்சாளர் அருட்தந்தை கமிலஸ் பெர்னாந்து மற்றும் உயிர்த்த ஞாயிறுதினக்குண்டுத்தாக்குதல் தொடர்பான தேசிய கத்தோலிக்கத் தகவல் குழுவின் உறுப்பினர் அருட்தந்தை சிரில் காமினி ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளின்கீழ் உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை எமக்கில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே அதுகுறித்து ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் வத்திக்கானுக்கும் எழுத்துமூலம் தெரியப்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் இடம்பெற்று சுமார் இரண்டரை வருடகாலமாக அதற்கான நீதியை எதிர்பார்த்துக்காத்திருக்கின்றோம் என்றும், அது தொடர்ச்சியாக மறுதலிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது அமைதிகாக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு அவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment