20 வயது முதல் 29 வயது வரைக்குமான நபர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க இன்று முதல் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 20 வயது முதல் 29 வயது வரைக்குமான நபர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய தற்போது தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் மற்றும் அனைத்து வைத்தியசாலைகளிலும் மேற்படி வயதுடைய நபர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, அந்தந்த மாவட்டங்களில் வசிக்கும் நபர்களுக்கு மட்டுமே அந்தந்த மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி வழங்கும் மத்திய நிலையங்களில் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படும் என்பதையும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
வேறு மாவட்டங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதற்கிணங்க கொழும்பில் 20 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்ட நபர்கள் தமக்கான தடுப்பூசிகளை விகாரமாதேவி பூங்கா, பனாகொட மற்றும் வேரஹெர இராணுவ வைத்தியசாலைகள், பத்தரமுல்ல தியத உயன ஆகிய நிலையங்களில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொழும்பு 1 - 15 வரையிலான பிரதேசங்களில் வாழும் 20 - 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுமென கொழும்பு மாநகர சபையின் தொற்று நோய் பிரிவு மருத்துவ அதிகாரி டாக்டர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க கொழும்பு சுகததாச விளையாட்டரங்கு, ஜிந்துபிட்டி மருத்துவ அதிகாரி காரியாலயம், போபர்ஸ் வீதி சனசமூக நிலைய மண்டபம்,கெம்பல் பார்க், சாலிகா மண்டபம், ரொக்சி கார்டன் ஆகிய நிலையங்களிலும் மேற்படி தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment